அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. இதற்காக இப்போதைய ஆளும் ஜனநாயகக் கட்சியும் சரி; குடியரசுக் கட்சியும் சரி; தங்கள் சார்பில் யாரை அதிபராக நிறுத்தலாம் என்று தேர்வு செய்யும் யோசனைகளைத் தொடங்கிவிட்டன. ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபராகப் போட்டியிட ஹிலாரி கிளிண்டன் மீண்டும் விருப்பம் தெரிவித்திருக்கிறார். இவரை அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இருக்கும் ஜனநாயகக்கட்சியினர் வாக்களித்து தேர்வு செய்யவேண்டும். ஏற்கெனவே 2008-ல் ஹிலாரி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் நியமனத்துக்காக தன்னை முன்னிறுத்தினார். ஆரம்பக் கட்டத்தில் முன்னிலையில் இருந்த அவரை கறுப்பினத்தை சேர்ந்த 40 வயதுகளில் இருந்த ஒருவர் முந்தினார். அவர் ஒபாமா! அந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிட்டு ஒபாமா வென்றார். ஆட்சி அமைத்ததும் வெளியுறவு அமைச்சராக ஹிலாரி கிளிண்டனை நியமித்திருந்தார். 2012 தேர்தலில் ஒபாமாவே மீண்டும் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றார். இருமுறைக்கு மேல் அதிபர் பதவிக்குப் போட்டியிட முடியாது. இந்நிலையில்தான் ஹிலாரி அதிபர் வேட்பாளராக தெரிவு செய்யப்படுவதற்கான தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். அவருக்குப் போட்டி இருப்பினும் கூட இம்முறை அவரே தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.
எதிர்ப்புறம் குடியரசுக் கட்சி யாரை நிறுத்தப்போகிறது? அங்கு நடக்கும் போட்டியில் முன்னணி வேட்பாளர்களில் ஒருவராக அடிபடும் பெயர் ஜெப் புஷ். முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தம்பி. அதாவது முன்னாள் அதிபர் ஹெச்.டபிள்யூ புஷ்ஷின் இன்னொரு மகன். இம்முறை அவரைக் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளராக நிறுத்தி அவர் வெற்றி பெற்றால் புஷ் குடும்பத்திலிருந்து அதிபர் ஆகும் மூன்றாவது நபர் ஆவார். அப்பா, அண்ணன் இருவருமே அமெரிக்க அதிபர்கள்! (ஒரு குடும்பத்திலிருந்து மூன்று பேர் தலைமைப் பதவிக்கு வருவது இந்தியாவில் மட்டும்தான் நடக்க வேண்டுமா என்ன?)
கிளிண்டன் வென்றால் கணவன் வகித்த அதிபர் பதவியை வகிக்கும் மனைவி ஆவார் ஹிலாரி. அதைவிட அமெரிக்க அதிபராகும் முதல் பெண்மணி ஆவார். அடுத்த ஆண்டு நவம்பரில் தேர்தல். அதற்கு முன்பாக ஜூலை வரை யாரை அதிபராக நிறுத்துவது என்கிற உட்கட்சித் தேர்தல் இழுபறி நடக்கும்.
இப்போதைக்கு கிளிண்டன் குடும்பமும் புஷ் குடும்பமும் 2016 தேர்தலில் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்! இந்தியாவோடு ஒப்பிடுகையில் இதுவும் வாரிசு அரசியல்தான்! என்ன ஒரே வித்தியாசம் என்றால் அதிபர் பதவிக்கு ஆசைப்படும் இவர்களுக்கு பெரிய அரசியல் அனுபவமும் பணி அனுபவமும் இருக்கிறது! ஜெப் ப்ளோரிடா மாகாணத்துக்கு இரண்டுமுறை தொடர்ந்து கவர்னராக இருந்தவர். ஹிலாரி நான்கு ஆண்டுகள் வெளியுறவு அமைச்சராக பணியாற்றி உலகெங்கும் அறியப்பட்டவர்!
இருப்பினும் இன்னும் பத்து ஆண்டு கழித்து செல்சியா கிளிண்டன் ( கிளிண்டன் தம்பதியரின் மகள்) நோயல் புஷ்ஷுக்கு( ஜெப் புஷ்ஷின் மகள்) எதிராக அதிபர் தேர்தலில் நின்றாலும் நிற்பார் என்ற கிண்டல் விமர்சனங்களும் இப்போதே எழ ஆரம்பித்துவிட்டன.
மே, 2015.